» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகல்: ராகுல் காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டு

வெள்ளி 26, ஆகஸ்ட் 2022 4:34:05 PM (IST)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அடையாள முகமாக இருந்த குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்த கலந்தாலோசனை முறையை ராகுல் காந்தி முற்றிலுமாக சிதைத்துவிட்டார். 2014 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத் தனமான செயல்பாடுகளே காரணம். சோனியா காந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கிறார் என்றும் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி ஒரு பொறுப்பற்ற நபர். தேசிய அளவில் பாஜகவுக்கும், பிராந்திய அளவில் மாநிலக் கட்சிகளுக்கும் காங்கிரஸை விட்டுக் கொடுத்துவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக ராகுலிலின் தலைமையால் தான் இது நடந்துள்ளது. அதுமட்டுமல்ல கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார். 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பின்னார் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதன் பின்னர் நிலைமை இன்னும்தான் மோசமாகியுள்ளது.

கட்சிக்காகவே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள். ரிமோட் கன்ட்ரோல் மோடில் செயல்பட்டதால் எப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிதைந்துபோனதோ அதேபோல் தற்போது காங்கிரஸும் சிதைந்துள்ளது என்று குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி இருக்கிறார். மற்றபடி எல்லா முடிவுகளையும் ராகுல் காந்தியோ இல்லை அவரது காரியதரிசிகளோ ஏன் அவரது பாதுகாவலர்களோ தான் எடுக்கிறார்கள்.

நான் ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பின்னர் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளேன். என்னைப்போல் உருவ பொம்மை செய்து இறுதி ஊர்வலம் நடத்தினர்.இதன் பின்னணியில் இருந்தவர்கள் ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் தான் என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

குலாம் நபி ஆசாத், ஜி 23 என்ற காங்கிரஸ் அதிருப்தி குழுவினரை வழிநடத்தி வந்தார். 2020 ஆம் ஆண்டில் உருவான இந்தக் குழு சோனியா காந்தியிடம் நிரந்தர முழு நேர தலைமை கட்சிக்குத் தேவை என்று வலியுறுத்தியது. தொடர்ந்து அதை வலியுறுத்தி வந்த நிலையில் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து தற்போது குலாம் நபி ஆசாத்தும் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.


மக்கள் கருத்து

MAKKALAug 28, 2022 - 02:04:39 PM | Posted IP 162.1*****

காங்கிரஸ் தேய்ந்து கொண்டே செல்கிறது.மூத்த தலைவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory