» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்: விமான நிலையங்களில் உஷார் நடவடிக்கை

வியாழன் 2, செப்டம்பர் 2021 5:42:26 PM (IST)



இந்தியாவுக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருபபதாக வெளியான தகவலையடுத்து விமான நிலையங்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்தியாவில் இருந்தும் பலர் அந்த நாட்டுக்கு சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் இவ்வாறு ஐ.எஸ். இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

ஈராக், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டதை அடுத்து அவர்களில் பலர் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தனர். அப்போது இந்தியாவில் இருந்து சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தவர்களும் ஆப்கானிஸ்தான் வந்துவிட்டனர். இவ்வளவு காலமும் அவர்கள் அங்கேயே இருந்தார்கள். இப்போது அமெரிக்கா வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.

அவர்கள் இனி ஆப்கானிஸ்தான் மண்ணில் வெளிநாட்டினர் யாருக்கும் இடமில்லை என்று கூறி இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த அல்கொய்தா, ஐ.எஸ். இயக்கங்களில் இருந்த பயங்கரவாதிகள் பெரும்பாலானோர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். தலிபான்கள் அவர்களையும் வெளியேறும்படி கூறி இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்கள் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் இருந்து சென்று சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மறுபடியும் இந்தியாவுக்கு திரும்பி வர முயற்சிக்கிறார்கள்.

அவர்கள் வேறு ஏதாவது நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழையலாம் என்று இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் இங்கு தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்றும் உளவுத்துறை கூறி இருக்கிறது. ஏற்கனவே ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதரவாளர்கள் இந்தியாவில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் இருப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்தியா திரும்பும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அவர்களுடன் இணைந்து தாக்குதல் நடத்தலாம் என்று கருதுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த 25 ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விவரங்களை உளவுத்துறையினர் சேகரித்துள்ளார்கள்.இவர்களில் சில பெண் பயங்கரவாதிகளும் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவிடாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

3-வது நாடுகள் வழியாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அவர்களை உடனடியாக கண்டறிந்து தடுக்க வேண்டும் என விமான நிலையம் மற்றும் துறைமுக இம்மிக்ரே‌ஷன் அதிகாரிகளுக்கு உளவுத்துறையினர் உத்தரவிட்டு இருக்கிறார்கள். எனவே அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த இந்திய பயங்கரவாதிகளில் அப்துல்லா அப்துல் ரஷீத், டாக்டர் இஜாஷ் போன்றவர்கள் முக்கியமானவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கியர் கோவில்களில் நடந்த தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்கள் தலைமையில்தான் இந்தியாவில் இருந்து சென்று ஐ.எஸ். இயக்கத்தில் பலர் சேர்ந்தனர்.

சமீபத்தில் கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதர் தலிபான் பிரதிநிதி ஷேர் முகமதுவுடன் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தினார். அப்போது இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் தரக்கூடாது என்று நிபந்தனை விதித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory