» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நூறு நாள் வேலை திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு; காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஞாயிறு 22, ஆகஸ்ட் 2021 9:58:22 AM (IST)

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு நடைபெற்று இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம், கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடு முழுவதும் 2 லட்சத்து 65 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில், 100 நாள் வேலை திட்டம் குறித்து ஊரக மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள சமூக தணிக்கை பிரிவுகள் தணிக்கையில் ஈடுபட்டன. இதில், அத்திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு நடந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளன.

லஞ்சம் கொடுப்பது, போலி நபர்கள் பெயரில் சம்பளம் வரவு வைப்பது, வியாபாரிகளிடம் அதிக விலைக்கு கொள்முதல் செய்வது போன்ற விதங்களில் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளன.இந்த பணத்தை கொரோனா நிவாரணத்துக்கு பயன்படுத்தி இருக்கலாம். மத்திய அரசு மெத்தனமாக செயல்பட்டு, கொரோனா காலத்திலும் இந்த முறைகேட்டுக்கு வழிவகுத்துள்ளது.ரூ.935 கோடி முறைகேடு செய்யப்பட்ட நிலையில், வெறும் ரூ.12 கோடியே 50 லட்சம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. இது, வெறும் 1.34 சதவீதம்தான். ஏழைகள் நலனுக்கான நலத்திட்டம் என்பதால்தான் இந்த சிறிய தொகை கூட முக்கியத்துவம் பெறுகிறது.

மோடி அரசு உரிய கவனத்துடனும், பொறுப்பேற்கும் தன்மையுடனும் செயல்படவில்லை என்பது நிரூபணமாகி விட்டது.இந்த திட்டத்தை, ‘காங்கிரசின் தோல்வி திட்டம்’ என்று பிரதமர் மோடி வர்ணித்தார். ஆனால், கொரோனா இரண்டு அலைகளின்போதும், இதுதான் ஏழைகளின் உயிர் காக்கும் திட்டமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory