» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் பட்டியல் வெளியீடு : 99.37 சதவிகிதம் பேர் தேர்ச்சி

வெள்ளி 30, ஜூலை 2021 5:19:43 PM (IST)

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியல் இன்று வெளியானது. இதில், 99.37 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இறுதி மதிப்பெண்கள் கணக்கிடும் பணி முடிவடைந்ததையடுத்து, இன்று(ஜூலை 30) பிற்பகல் 2மணியளவில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை cbseresults.nic.in, digilocker.gov.in ஆகிய இணைதளங்களிலும் digilocker app என்ற செயலி மூலமும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தாண்டு பிளஸ் 2 தேர்வை 13,04,561 மாணவர்கள் எழுதினர். இதில், 12,96,318 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 99.67 சதவிகிதம், மாணவர்கள் 99.13 சதவிகிதம் என மொத்தமாக 99.37 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

70,004 மாணவர்கள் 95 சதவிகிதத்துக்கு அதிகமாகவும் 1,50,152 மாணவர்கள் 90-95% சதவிகிதம் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் முதலிடம், இரண்டாமிடம் என்ற தகுதி பட்டியல் வெளியிடப்படவில்லை.

மொத்தம் 14,088 பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் 65,184 மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இவர்களுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாதவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகு தேர்வுகள் நடத்தப்படும், அப்போது மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த மாணவர் அபிஷேக் சவுத்ரி, ”தேர்வு முடிவுகள் நான் எதிர்பார்த்தவை போன்று வரவில்லை. நான் 80% மதிப்பெண்ணை எதிர்பார்த்தேன், ஆனால் வரவில்லை. அரசு கல்லூரியில் சேர விரும்பினேன். ஆனால் இந்த மதிப்பெண்ணிற்கு அரசு கல்லூரியில் இடம் கிடைப்பது கடினம்” என்று கூறினார். 2020 ஆம் ஆண்டில், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் 92.15 சதவிகிதமும், மாணவர்கள் 86.19 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory