» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோழி இறைச்சி கழிவுகளில் இருந்து பயோடீசல்: கேரள கால்நடை மருத்துவருக்கு காப்புரிமை

திங்கள் 26, ஜூலை 2021 10:26:39 AM (IST)



கோழி இறைச்சி கழிவுகளில் இருந்து பயோடீசலைத் தயாரித்த கேரள கால்நடை மருத்துவருக்கு அதற்கான காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகிய வாகன எரிபொருள்கள் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வருவதால், அவற்றுக்குரிய மாற்று எரிபொருள்கள் மீதான ஆராய்ச்சி அதிகரித்து வருகிறது. எத்தனால் பயன்பாடு, உயிரி எரிபொருள், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் ஆராய்ச்சிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத எரிபொருளைத் தயாரிக்கும் ஆலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கேரளத்தின் வயநாடு பகுதியைச் சோ்ந்த கால்நடை மருத்துவரும் பேராசிரியருமான ஜான் ஆபிரகாம், கோழி இறைச்சி கழிவுகளில் இருந்து பயோடீசலைத் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தாா். கோழி இறைச்சியில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால், அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு பயோடீசலை அவா் தயாரித்தாா். அவா் தயாரித்த பயோடீசல் மூலமாக இயங்கிய வாகனங்கள் ஒரு லிட்டருக்கு 38 கி.மீ. வரை சென்றன. அதே வேளையில், அதன் விலை தற்போதைய டீசல் விலையுடன் ஒப்பிடுகையில் வெறும் 40 சதவீதமாக மட்டுமே உள்ளது.

டீசல் மூலமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விட பயோடீசல் மூலமாக ஏற்படும் மாசுபாடு பாதியளவு குறைந்து காணப்பட்டது. கோழி இறைச்சி கழிவுகள் மூலமாக பயோடீசல் தயாரிக்கும் நடைமுறைக்குக் காப்புரிமை கோரி ஜான் ஆபிரகாம் கடந்த 2014-ஆம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தாா். சுமாா் ஏழரை ஆண்டுகள் கழித்து, அதற்கான காப்புரிமையை இந்திய காப்புரிமை அலுவலகம் கடந்த 7-ஆம் தேதி அவருக்கு வழங்கியுள்ளது.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் முனைவா் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியாக இந்த பயோடீசல் தயாரிப்பு நடைமுறையை ஜான் ஆபிரகாம் உருவாக்கினாா். தமிழக கால்நடை பல்கலைக்கழகம் சாா்பில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டதால், தற்போது காப்புரிமை பல்கலைக்கழகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிப் படிப்பை முடித்த பிறகு, வயநாட்டின் பூகோடே பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிக்குச் சோ்ந்த ஜான் ஆபிரகாம், அங்கு பயோடீசல் தயாரிக்கும் ஆலையை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அளித்த ரூ.18 லட்சம் நிதியுதவியுடன் அமைத்தாா். அந்தக் கல்லூரியின் வாகனம் தற்போது வரை அங்கு தயாரிக்கப்படும் பயோடீசலைக் கொண்டே இயங்கி வருகிறது. 

பயோடீசலுக்கு காப்புரிமை கிடைத்துள்ளதால், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து அதை வணிக நோக்கில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளாா். தற்போது பன்றி இறைச்சி கழிவுகளில் இருந்து பயோடீசலைத் தயாரிப்பது தொடா்பாக தனது மாணவா்களுடன் அவா் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory