» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசுக்கு, ரூ.99,122 கோடி ஈவுத் தொகை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு

ஞாயிறு 23, மே 2021 8:22:19 PM (IST)

கோவிட்19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசுக்கு, ரூ.99,122 கோடி ஈவுத் தொகை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி, முடிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், வங்கியின் இயக்குனர் குழு கூட்டம், காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச பொருளாதார சூழல், கோவிட் சவாலை சமாளிக்க, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த நிதிக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மேலும், ரிசர்வ் வங்கியின் நிதியாண்டை, ஜுலை - ஜூன் என்ற நடைமுறையில் இருந்து, ஏப்ரல்- மார்ச் ஆக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த, 2020 - 21ம் நிதியாண்டின், ஜுலை - மார்ச் வரையிலான ஒன்பது மாத கால நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து, மத்திய அரசுக்கு, ரூ. 99,122 கோடி ஈவுத் தொகை வழங்க, இயக்குனர் குழு அனுமதி வழங்கியது.

மேலும், பிமல் ஜலான் அறிக்கைப்படி, ரிசர்வ் வங்கியின் இடர்பாட்டு நிதியை, 5.50 சதவீதமாக பராமரித்து வரவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கிக்கு, நிதிச் சந்தை வர்த்தக நடவடிக்கைகள் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. இடர்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது போக சந்தை செயல்பாடுகள், முதலீடுகள் மற்றும் நாணய அச்சிடுதல் ஆகியவற்றிலிருந்து உருவாகும் உபரியிலிருந்து ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்திற்கு ஈவுத்தொகையை செலுத்துகிறது.

கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலை பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைத்து, வரி வருவாயை பாதிக்கக்கூடும் என்பதால், இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட 6.8 சதவீதம் என்ற பட்ஜெட் பற்றாக்குறைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்.அதனால் இந்த நிதியாண்டிற்கான துணை வணிக நலன்கள் அல்லது முதலீடுகளை விற்கும் செயல் மூலம் மத்திய அரசு ரூ. 75 1.75 லட்சம் கோடியை அடைய வேண்டும்.

இதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ரூ. .99,122 கோடி ஈவுத்தொகை கொடுக்க முன்வந்துள்ளது.கடந்த, 2019 - 20ம் நிதியாண்டில், ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு ரூ. 57,128 கோடி ஈவுத் தொகை வழங்கியது. இது, 2018 - 19ம் நிதியாண்டில், ஒரு லட்சத்து, 76 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி அளிக்கும் ஈவுத் தொகை, கோவிட் தொடர்பான செலவினங்களை சமாளிக்க, மத்திய அரசுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory