வாரத்தில் 5 நாட்கள் பணி முறையை அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பி.எல்.ஐ. ஊக்கத்தொகையைச் சமமாக வழங்குவது, ஐ.டி.பி.ஐ. வங்கியைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் இன்று முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தபோதிலும் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க வங்கிகள் இயங்கிய நிலையில், வேலைநிறுத்தம் உறுதியாகும் சூழல் நிலவியது. இதனிடையே, நேற்று இரவு 9.30 மணியளவில் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே அவசரப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாகச் சாதகமான உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தொடங்குவதாக இருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மாதத்தின் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் வங்கி விடுமுறை அளிப்பது தொடர்பாக விவாதிக்க ஐ.பி.ஏ. மற்றும் யு.எஃப்.பி.யு. பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழு உடனடியாக அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரைக்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த 2024 மார்ச் 8-ஆம் தேதி எட்டப்பட்ட ஒப்பந்தக் குறிப்புகளில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று முதல் அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.