நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நேற்று மாலை 5:45 மணியளவில் மாதா உருவம் பொறித்த வண்ணக்கொடி பேராலய முகப்பில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, கடற்கரை சாலை மற்றும் ஆரியநாட்டுத் தெரு வழியாகக் கொடிகம்பத்தைச் சென்றடைந்தது.

தொடர்ந்து பேராலயத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கொடிகம்பத்தில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியைப் புனிதம் செய்து மாலை 6:40 மணிக்கு ஏற்றி வைத்தார். அப்போது வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, வண்ணமயமான வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து திருத்தல கலையரங்கில் ஆயர் தலைமையில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி மற்றும் தமிழில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு மாதா தேர் பவனி நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் மராத்தி, கன்னடம், ஆங்கிலம், கொங்கனி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறவுள்ளன.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 8-ஆம் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6 மணிக்கு ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலியும், மாலை 6 மணிக்கு விழாக்கொடி இறக்கப்பட்டுத் திருவிழா நிறைவடையும்.