உஸ்பெகிஸ்தான் மண்ணில் திருக்குறளின் சிறப்புகளை எடுத்துரைத்து, அதனை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க வேண்டுகோள் விடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடல் கடந்து செல்லும் தமிழின் நறுமணமாய், திசை எட்டும் பரவும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழை உஸ்பெகிஸ்தான் மண்ணில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளார்.

தாஷ்கண்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பிரதமர், திருக்குறள் இன்றும் வாழ்வியலின் அனைத்துத் துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்தார். மேலும், ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை அறிவு பொதிந்த திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க அவர் விடுத்த வேண்டுகோள், தமிழின் ஞானச்செறிவை மத்திய ஆசிய நாடுகளின் இதயங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவது முதல் நாட்டின் புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது வரை, தொடர்ந்து தமிழுக்குப் பெருமை சேர்த்து வரும் பிரதமரின் செயல்கள் மிகவும் போற்றுதலுக்குரியவை. ஏற்கனவே பல இந்திய மற்றும் உலக மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளதோடு, வள்ளுவத்தின் வாய்மையை வையகமெங்கும் கொண்டு சேர்க்கும் பிரதமரின் சீரிய முயற்சிகளுக்குத் தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.