தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் உணவு பரிமாறத் தாமதமானதால் ஆத்திரமடைந்து ஹோட்டலைச் சூறையாடி தாக்குதல் நடத்திய விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரை எட்டயபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் வேனில் திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினம் கோவில்களுக்குச் சென்று விட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம். கோட்டூர் விலக்கு பகுதியில் செல்வா என்பவருக்குச் சொந்தமான ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வேனை நிறுத்தியுள்ளனர். 20 பேரும் ஒரே நேரத்தில் சாப்பிட அமர்ந்த நிலையில், உணவு வரத் தாமதமானதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாப்பிடும் இலையை மூடிவிட்டு மொத்தமாகக் கிளம்ப முயன்றனர்.

அப்போது ஹோட்டல் உரிமையாளர் செல்வாவிற்கும், சாப்பிட வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கும்பல் ஹோட்டலில் இருந்த பொருட்களைச் சூறையாடித் தாக்குதலில் ஈடுபட்டது.

இந்தத் தாக்குதலில் ஹோட்டல் உரிமையாளர் செல்வா மற்றும் ஊழியர்களான தங்கத்துரை, கண்ணன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்துப் புகாரின் அடிப்படையில் எட்டயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கம்மாபட்டியைச் சேர்ந்த அர்ஜுன், அஜித்குமார், சுதாகர், ராஜா, பவித்குமார் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அதில் 10 பேரைக் கைது செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.