வெனிசுலாவில் நடைபெற்ற பிடே உலக ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீ 9½ புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். அதே பிரிவில் மற்றொரு தமிழக வீராங்கனை நிவேதிதா 3-வது இடத்தைப் பிடித்த நிலையில், இருவருக்கும் முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெற்றி, 3 டிராவுடன் 9½ புள்ளிகள் குவித்து சவிதா ஸ்ரீ முதலிடம் பிடித்தார். சீன வீராங்கனை சென் யினிங் 8½ புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், மற்றொரு தமிழக வீராங்கனை நிவேதிதா 7½ புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர். சவிதா ஸ்ரீ மற்றும் நிவேதிதா ஆகிய இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் ஈதன் வாஸ் (9 புள்ளி) முதலிடமும், பிரனீத் (8½ புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்; அஜர்பைஜான் வீரர் ககன் அகமத் (8½ புள்ளி) 2-வது இடத்தைப் பிடித்தார்.
முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து:
வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், உலகச் சாம்பியன் பட்டம் வென்ற சவிதா ஸ்ரீக்கும், மூன்றாம் இடம் பிடித்த நிவேதிதாவுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் அவர்கள் படைத்துள்ள இந்தச் சாதனை இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் பல சர்வதேச சாதனைகள் படைத்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

