தூத்துக்குடி, தருவை உள்விளையாட்டு அரங்கில் இன்று (29.09.2026), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை 2026 அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 09.09.2026 அன்று முதல் தொடங்கப்பட்டு 45 வகையான விளையாட்டு போட்டிகளுடன் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 5 பிரிவுகளில் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து இன்றையதினம் அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. விளையாட்டு மிகவும் அவசியமான ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அரசு பணியில் இருக்கும் பொழுது குறிப்பாக தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அரசு சார்ந்த பணிகள் என இரவு பகலாக ஈடுபடும் பொழுது உடல்நலத்தை கவனிக்க இயலாத நிலை நேரிடும். ஆகவே உழைப்புக்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று.
அதற்காக தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். நானும் 2021ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் 2 ஆண்டுகள் பணி செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது பணியில் ஈடுபாடுடன் செயல்பட்டதன் விளைவாக என்னுடைய உடல் நலத்தை சரியாக கவனிக்காததால், உடல்நிலை சரியில்லாமல் ஏற்பட்டது. அதன்பிறகு தான் பணி மற்றும் உடல்நலம் ஆகியவற்றை சமமாக கவனிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தால் தான் பணியிலும் சிறப்பாக ஈடுபாடுடன் செயல்பட முடியும். நான் ஒரு பள்ளியில் ஆய்வுக்கு சென்றிருந்த பொழுது, அங்கிருந்த ஒரு மாணவனிடம் நீங்கள் என்ன விளையாட்டு விளையாடுவீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்த மாணவன் எங்கள் வீட்டில் விளையாடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள், படிப்பு மட்டும் தான் என்று பெற்றோர்கள் அறிவுறுத்திகிறார்கள் என்று கூறினான்.
ஆகவே நீங்கள் உடற்பயிற்சிக்கு என்று தினந்தோறும் குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது ஒதுக்கீடு செய்து, கட்டாயம் விளையாட வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். அதிகமான மாணவர்கள் கைபேசியிலேயே விளையாட்டு (Games) போன்றவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக சமூக ஊடகங்கள் போன்றவற்றில் அதிக அளவிலான நேரத்தை செலவிடுகிறீர்கள். அதனை தவிர்த்து உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு உடற்பயிற்சியே தான் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தினராஜன் மற்றும் உடற்கல்வி பயிற்றுநர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

