தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுப்பையா (70). இவர் தூத்துக்குடி - மதுரை புதிய துறைமுகம் பைபாஸ் ரோட்டில் லாரி ஷெட் நடத்தி வந்தார். இன்று (நவம்பர் 21) மதியம் வீட்டில் உணவு அருந்திவிட்டு, மீண்டும் தனது லாரி ஷெட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள தனியார் கேஸ் நிறுவனம் அருகே அவர் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த சுப்பையா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்துத் தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த சுப்பையாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீசார், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த நிர்மல் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

