தூத்துக்குடியின் வர்த்தக மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், தூத்துக்குடி - சென்னை இடையே பகல் நேரப் புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு இந்திய குடியரசுக் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் வர்த்தக வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் பயண வசதிக்காகப் புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தவும், ஏற்கனவே இயங்கி வரும் ரயில்களை நீட்டிக்கவும் கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு இந்திய குடியரசுக் கட்சி (RPI) சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசுக் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மு. சிவலிங்கம், சென்னை பார்க் டவுனில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகப் பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாட்டின் முக்கியமான வர்த்தக, தொழில் மற்றும் துறைமுக நகரமாகத் தூத்துக்குடி விளங்கி வருகிறது. மொத்த வியாபாரம் மற்றும் கொள்முதல் பணிகளுக்காக வணிகர்கள் ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். எனவே, தூத்துக்குடியின் ரயில்வே வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பின்வரும் 8 முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்:

புதிய வந்தே பாரத் விரைவு ரயில்: வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னைக்குச் சென்று அதே நாளில் திரும்பும் வகையில், தூத்துக்குடி முதல் சென்னை எழும்பூர் வரை பகல் நேரத்தில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

மதுரை - சென்னை விரைவு ரயில் நீட்டிப்பு: இருவாராந்திர ரயிலாக இயக்கப்படும் மதுரை - சென்னை எழும்பூர் விரைவு ரயிலை (எண்: 22623/22624) தூத்துக்குடி வரை நீட்டிப்பதுடன், தினசரி சேவையாக மாற்ற வேண்டும்.

மும்பை ரயில் நீட்டிப்பு: ஜவுளி, உப்பு, கருவாடு மற்றும் மசாலாப் பொருட்கள் வர்த்தகம் மேம்படும் வகையில், மும்பை LTT - மதுரை வாராந்திர விரைவு ரயிலை (எண்: 22101/22102) தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

நரசாபுரம் சிறப்பு ரயில் நிரந்தரமாக்கல்: தமிழ்நாடு - ஆந்திரா இடையிலான போக்குவரத்து வசதிக்காக, தற்போது இயக்கப்படும் தூத்துக்குடி - நரசாபுரம் சிறப்பு ரயிலை (எண்: 06019/06020) நிரந்தர ரயில் சேவையாக மாற்ற வேண்டும்.

மேட்டுப்பாளையம் ரயில் தினசரி சேவை: கோயம்புத்தூர் பகுதிகளுடனான ஜவுளி மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் வர்த்தகம் வளர்ச்சியடைய, இருவாராந்திர ரயிலாக உள்ள தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயிலை (எண்: 16765/16766) தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

பாலருவி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள்: பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பாலருவி விரைவு ரயிலில் (எண்: 16791/16792) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு ஏசி (2AC) பெட்டியும், ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி (3AC) பெட்டியும் இணைக்க வேண்டும்.

கன்னியாகுமரி - நெல்லை பயணிகள் ரயில் நீட்டிப்பு: திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் பகுதிகளுக்கான தினசரி வணிகத் தொடர்புகளை மேம்படுத்த, கன்னியாகுமரி - திருநெல்வேலி பயணிகள் ரயிலை (எண்: 56707/56708) தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

விருதுநகர் - காரைக்குடி பயணிகள் ரயில் நீட்டிப்பு: மளிகை, வன்பொருட்கள் மற்றும் பட்டாசு மொத்த வியாபாரப் போக்குவரத்து மேம்பட, விருதுநகர் - காரைக்குடி பயணிகள் ரயிலை (எண்: 56834) தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

மேற்கண்ட திட்டங்களை வரவிருக்கும் ரயில்வே செயல்பாட்டுத் திட்டங்களில் சேர்த்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம், சிறு மற்றும் குறு வணிகர்கள் பயன்பெறுவதுடன் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.