தூத்துக்குடி மாவட்டம், கீழ அரசரடி பஞ்சாயத்திற்குட்பட்ட துப்பாஸ்பட்டி மற்றும் அய்யனார்புரம் கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் கீழ அரசரடி பஞ்சாயத்திற்குட்பட்ட துப்பாஸ்பட்டி மற்றும் அய்யனார்புரம் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் உப்பளத் தொழிலாளர்களாகவும், தினக்கூலிகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த வாரம் வரை இப்பகுதியில் எவ்வித மதுபானக் கடைகளும் இயங்கவில்லை. ஆனால், கடந்த 5 நாட்களுக்கு முன்பு துப்பாஸ்பட்டி, அய்யனார்புரம் கிராமப் பகுதியில் 10060 என்ற எண் கொண்ட புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இக் கடை திறப்பால் அப்பகுதியில் பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இப்புதிய டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம், குடியிருப்புகள் மற்றும் கடலோரச் சோதனைச் சாவடி மையம் ஆகியவை அமைந்துள்ளன. இக் கடைக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான நபர்கள் வந்து செல்வதால், அவ்வழியாகச் செல்லும் பெண்கள், மாணவ-மாணவிகள் மற்றும் உப்பளத்திற்கு வேலைக்குச் சென்று திரும்பும் தொழிலாளர்களுக்குப் பெரும் இடையூறும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இப் புதிய 10060 டாஸ்மாக் கடையை உடனடியாகவும் நிரந்தரமாகவும் அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது, புதிய தமிழகம் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் வெற்றிவேல், பாலசுப்பிரமணியன், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.