தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாலு மகன் குருசாமி (45) இவர் பழைய பேருந்து நிலையம் அருகே மீனாட்சிபுரம் மெயின் ரோட்டில் மொத்த மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 11 மணியளவில் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவு 12.40 மணியளவில் இவரது கடையிலிருந்து புகை வருவதாக குருசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் கடைக்கு வந்து பார்க்க போது கடை தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருணாகரன் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் கோமதி அமுதா, நட்டார் ஆனந்தி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.1கோடி மதிப்பிலான மொத்த மளிகை பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

