தூத்துக்குடி உப்பளப் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணியிடம் தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி உப்பளம் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், இக்கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், தென் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டுச் சென்னை திரும்புவதற்காகப் பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்போது, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சேகர் தலைமையில், பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ரகுபதி, முகேஷ் சண்முகவேல், பாலசுப்ரமணியன், எல்.ஆர். சிவாகர், வழக்கறிஞர் பாஸ்கர், பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்தனர்.
உப்பளப் பகுதியைக் காக்கும் வகையில் கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்தில் அமைக்கத் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் இது குறித்துக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.
ஏற்கனவே சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து மனு அளித்து ஆதரவு பெற்றதையும் நிர்வாகிகள் இதன்போது நினைவுகூர்ந்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட சௌமியா அன்புமணி, உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரப் போராட்டத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாகத் துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.

