தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருவதால், பொதுமக்கள் ஆவின் பாலை அதிகளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகத் தூத்துக்குடி மாநகரில் ஆவின் பாலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக 'எம்பவர் இந்தியா' நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் செயல் இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் "தனியார் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயா்த்தியுள்ளன. ஒரே ஆண்டில் 3-ஆவது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலை உயர்வால், ஆவின் பாலுக்கும் தனியார் நிறுவன பாலுக்கும் இடையேயான விலை வித்தியாசம் லிட்டருக்குக் குறைந்தபட்சம் ரூ.14 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவில் ஆவின் பாலை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாக, கடந்த ஒரு வார காலமாகத் தூத்துக்குடியில் ஆவின் பால் சீராகக் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், தூத்துக்குடியில் தேவைக்கேற்ப பால் விநியோகத்தை உடனடியாகச் சீரமைக்க ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.