கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூருக்கு இன்று காலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இப்பேருந்தில் 6 பயணிகள் பயணித்தனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். இப்பேருந்து இன்று காலை தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, சங்கரப்பேரி விலக்கு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இவ்விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் 6 பேருக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் மாற்றுப் பேருந்து மூலம் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

நடுரோட்டில் கவிழ்ந்துகிடந்த பேருந்தைக் கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்து தொடர்பாகச் சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.