தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலிருந்து நிலக்கரி சாம்பல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று மாலையில் துறைமுகச் சாலையில் சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் தூத்துக்குடி நோக்கித் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புற டயர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி ரவுண்டானாவின் பக்கவாட்டில் சரிந்து கவிழ்ந்தது.

லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த நிலக்கரி சாம்பல் சாலையோரத்தில் கொட்டியது. எனினும், இச்சம்பவத்தில் லாரி ஓட்டுநருக்கு எவ்வித காயமும் ஏற்படாமல் அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.

இவ்விபத்து குறித்துத் தகவலறிந்த முத்தையாபுரம் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். லாரி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.