தூத்துக்குடி மாநகராட்சி 36-வது வார்டுக்கு உட்பட்ட மாசிலாமணிபுரத்தில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவில் அமைந்துள்ள சுமார் 12 மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரியாமல் பழுதடைந்து காணப்படுகின்றன.

இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் பூங்கா முழுமையாக இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மாலை மற்றும் இரவு வேளையில் இங்கு நடைபயிற்சி மேற்கொள்ள வரும் முதியவர்கள், பெண்கள் மற்றும் விளையாட வரும் குழந்தைகள் பூங்காவைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருள் சூழ்ந்து காணப்படுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், எனவே தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பழுதடைந்த மின் விளக்குகளைச் சீரமைத்துத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மாசிலாமணிபுரம் பூங்கா மட்டுமல்லாது, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பூங்காக்களையும் முறையாகப் பராமரித்து, பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.