தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்களுக்கான மாதாந்திரக் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் வருகிற டிசம்பர் மாதம் கோட்ட அளவில் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ரெமோனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், டிசம்பர் 8-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி நகர்ப்புறக் கோட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து, டிசம்பர் 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், டிசம்பர் 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி ஊரகச் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே, அந்தந்தக் கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் இக்கூட்டங்களில் நேரில் கலந்து கொண்டு, தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.