மாற்று மாநிலக் கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் அந்தந்த மாநிலங்களின் பண்பாடு தேய்ந்துவிடும் என்றும், தமிழ்நாட்டில் கரகாட்டம், வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம் உள்ளிட்ட தமிழ் மண்ணின் பாரம்பரியக் கலைகளுக்கே முதலிடம் அளிக்க வேண்டும் என்றும் தமிழன்டா இயக்கத் தலைவர் கலைச்சுடர் மணி ஜெகஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா பல்வேறு மொழிகள், பண்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட மதச்சார்பற்ற நாடாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய கலைகளே அந்த மண்ணின் வரலாறு, வாழ்வியல், வீரம் மற்றும் பக்தியைப் பறைசாற்றும் அடையாளமாக உள்ளன. பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் சிலம்பாட்டம் போன்றவை வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அவை தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள்.

மாற்று மாநிலக் கலைகளை ரசிப்பதோ, கற்றுக்கொள்வதோ தவறல்ல. கேரளாவில் செண்டை மேளம், கதகளி, மோகினியாட்டம், தெய்யம்; ஆந்திராவில் குச்சிப்புடி; கர்நாடகாவில் யக்ஷகானம்; மகாராஷ்டிராவில் லாவணி, தமாஷா; ஒடிசாவில் ஒடிசி; பஞ்சாபில் பாங்க்ரா; வட இந்தியாவில் நாசிக் டோல் ஆகியவை வளர வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் தமிழ் கலைகளே முதலில் வளர வேண்டும்.

ஆனால் இன்று பள்ளி விழாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கட்சி நிகழ்வுகளில் கூட தமிழ் மண்ணின் கலைகளை விடச் செண்டை மேளம், நாசிக் டோல் போன்ற மாற்று மாநிலக் கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது வேதனையளிக்கிறது. இது தொடர்ந்தால் அடுத்த தலைமுறைக்கு நம் கலைகள் அந்நியமாகிப் போகும்.

கிராமியக் கலைஞர்களைக் காக்க 5 முக்கியக் கோரிக்கைகள்:

தற்போது மேடை வாய்ப்புகளும், வருமானமும் இன்றி கிராமியக் கலைஞர்கள் பலர் வறுமையில் வாடுகின்றனர். கலை அழிந்தால் பண்பாடும், மொழியும், இனமும் அழிந்துவிடும். எனவே, தமிழ் பாரம்பரியக் கலைகளையும் கலைஞர்களையும் பாதுகாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

பள்ளிகளில் பயிற்சி: பள்ளிகளில் தமிழ் நாட்டுப்புறக் கலைகளுக்குத் தனிப் பாடமாகவும் பயிற்சியாகவும் இடமளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி ஆண்டு விழாவிலும் குறைந்தது ஒரு தமிழ் பாரம்பரியக் கலை நிகழ்ச்சி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் நமது மண்ணின் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் முதல் மரியாதையும் முன்னுரிமையும் வழங்க வேண்டும். கிராமியக் கலைஞர்களுக்கு மாத ஊதியம், மேடை வாய்ப்புகள், அங்கீகாரம் மற்றும் விருதுகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். நமது பாரம்பரியக் கலைகளைக் கற்பது பெருமை மற்றும் கௌரவம் என்ற உணர்வை இளைஞர்களிடம் உருவாக்க வேண்டும்.

தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் நமது பாரம்பரியக் கலைகளுக்கு அதிக இடமளிக்க வேண்டும். நமது பண்பாடு தேயாமல் அடுத்த தலைமுறைக்குச் சென்றடைய, அந்தந்த மாநிலக் கலைகளை மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும். இவ்வாறு கலைச்சுடர் மணி ஜெகஜீவன் தெரிவித்துள்ளார்.