திருச்செந்தூர் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு இயற்கை உரங்களாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் இந்த உரங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆணையாளர் (பொ) மகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள 27 வார்டு பகுதிகளிலும் தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பை கழிவுகள், நகராட்சியின் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு இயந்திரத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு இயற்கை உரங்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் திருச்செந்தூர் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட 12 மெட்ரிக் டன் எடையுள்ள குப்பை இயற்கை உரம் திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு தேவையான இயற்கை உரத்தை திருச்செந்தூர் நகராட்சியை தொடர்பு கொண்டு இலவசமாக பெற்று, மண் வளத்தையும் விவசாயத்தையும் மேம்படுத்தும்படி ஆணையாளர் (பொ) மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.