கடல் வழியாகத் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில், இந்தியக் கடலோரக் காவல்படை, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை, தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமம் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து 'சீ விஜில்' பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று (நவம்பர் 25) காலை 11 மணியளவில் தூத்துக்குடி ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ் அருகே எதிரிப் படையினராகச் செயல்பட்ட 'ரெட் போர்ஸ்' பிரிவைச் சேர்ந்த 7 வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதனைத் தீவிரக் கண்காணிப்பில் இருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் கண்டறிந்து 7 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

இதேபோல், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகப் பகுதியிலும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர், அப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற மேலும் 6 'ரெட் போர்ஸ்' வீரர்களை கடேலார காவல்படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர்.

கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தவும், படைப்பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைச் சோதிக்கவும் இந்த ஒத்திகை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.