2026-2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை அரசுப் பணியாளர்கள் பிரிவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்ற அணியினர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (புதன்கிழமை, நவம்பர் 25) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் கோப்பை 2026-27 ஆம் ஆண்டிற்கான அரசு அலுவலர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மி. பிரபு, கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அறிவழகன் என்ற சிவராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்த், சரவணன் வேல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், தமிழ்நாடு காவல்துறை இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் கௌஷிக், சிவராம் சுப்பிரமணியன், முனியராஜ் மற்றும் காமராஜ் ஆகியோர் கொண்ட அணி பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றது.

இதற்காக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை நேரில் சந்தித்த வீரர்கள், வெண்கலப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.