ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட திறந்தவெளி அகழாய்வுப் பகுதிகளின் மீது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைப் பணிகளைத் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பழமைவாய்ந்த ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தில் 125 ஏக்கர் நிலப்பரப்பு மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2020 பிப்ரவரி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் 5-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், 2026 மத்திய பட்ஜெட்டிலும் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் தளங்களைக் கலாச்சார மையங்களாக மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, 2023 டிசம்பர் வெள்ளத்திற்குப் பிறகு பணிகள் தாமதமான நிலையில், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்த வழக்கில், 2026 நவம்பரில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்தியத் தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்தது. அதில், வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, திறந்தவெளி அகழாய்வுப் பகுதிகளின் மீது மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட திறந்தவெளி அகழாய்வுப் பகுதிகளில் மேற்கூரை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனைத் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ் நேரில் பார்வையிட்டார். அப்போது திருச்சி தொல்லியல் இயக்குநர் அறவாழி மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் பணிகள் குறித்து விளக்கமளித்தனர்; முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு உடனிருந்தார்.
முன்னதாக, பாரம்பரிய தின விழாவை முன்னிட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் துறைத்தலைவர் முனைவர் சுதாகர் தலைமையில் இத்தளத்தைப் பார்வையிட்டனர்.
விரைவாக நடைபெறும் சீரமைப்புப் பணிகளுக்காக இந்தியத் தொல்லியல் துறையினரைத் தொல்லியல் ஆர்வலர்கள் பாராட்டினர். அதேவேளையில், திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆதிச்சநல்லூர் தொல்லியல் பொருட்களை மீண்டும் கொண்டு வந்து, ஆதிச்சநல்லூரில் விரைவில் நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

