தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி காய்கறி விற்பனை சந்தைகள், உழவர் சந்தைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இச்சந்தைகளுக்குத் தூத்துக்குடி சுற்றுவட்டாரக் கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் வெளிமாவட்ட மார்க்கெட்டுகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் காய்கறிகளின் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்தே காய்கறிகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்பனையான அவரைக்காய் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் விலை இரட்டிப்பாகி நேற்று கிலோ ரூ.160-க்கு விற்பனையானது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற தக்காளி விலை உயர்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று கேரட் ரூ.60, இஞ்சி ரூ.180, பீட்ரூட் ரூ.50, மிளகாய் ரூ.60, வெள்ளை கத்தரிக்காய் ரூ.60, ஊதா கத்திரிக்காய் ரூ.40-க்கும், உள்ளி ரூ.100, பல்லாரி ரூ.70, வெண்டைக்காய் ரூ.30-க்கும் விற்பனையானது.

இது குறித்துக் காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தால் உள்ளூர் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம். போக்குவரத்துச் செலவு மற்றும் வரத்துக் குறைவு காரணமாகவே விலை உயர்ந்துள்ளது" எனத் தெரிவித்தனர்.