தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு மற்றும் கோரம்பள்ளம் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளையும் வண்டல் மண் அகற்றும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரவிருக்கும் பருவமழையை முன்னிட்டு, நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் ஓடைகளில் அடைப்புகளை நீக்கி, தடையின்றி மழைநீர் செல்ல பல்வேறு தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அய்யனடைப்பு ஊராட்சியில் ஏ. கைலாசபுரம் முதல் செங்குளம் ஊரணி வரை உள்ள 1,800 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட நீர்வரத்துக் கால்வாயில் ரூ.1.13 லட்சம் மதிப்பீட்டில் வண்டல் மண் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோரம்பள்ளம் ஊராட்சியில் சுப்பிரமணியபுரம் முதல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் வரை உள்ள 1,575 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்ட ஓடையில் ரூ.1.98 லட்சம் மதிப்பீட்டில் வண்டல் மண் அகற்றும் பணி நடைபெறுகிறது.

அய்யனடைப்பு ஊராட்சியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சிறு பாலத்திற்கான 'பக்கிள் ஓடை' 1,300 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்ட நீர்வரத்துக் கால்வாயில் ரூ.3.27 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் புதர் மற்றும் செடி-கொடிகளை அகற்றுதல், அகற்றிய கழிவுகளை அப்புறப்படுத்துதல் மற்றும் எந்திரங்கள் மூலம் வண்டல் மண் அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து மழைக்காலங்களில் தண்ணீர் சீராகச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. சரவணன் மற்றும் அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.