நீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றிடத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சுப்பையாபுரம் 1-வது தெருவில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில், மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை அமல்படுத்தத் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வருகின்ற 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில், டூவிபுரம் 5-வது தெருவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நெல்லை கோட்டச் செயலாளர் பிரம்மநாயகம், இந்து முன்னணி மாநகர மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதிநாதன் ஆழ்வார், மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் இசக்கியலட்சுமி, இந்து அன்னையர் முன்னணி முத்துலட்சுமி, மாவட்டச் செயலாளர் எல்.ஆர். சரவணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், பழனியாண்டி, கவி சண்முகம், முத்துகிருஷ்ணன், கோபி மற்றும் மண்டலத் தலைவர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.