திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருநெல்வேலி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை வண்ணாரப்பேட்டை, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் வாழ்வாதார இயக்கம் சார்பில் முகாமிற்கு தேவையான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முன்னணி தனியார் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அதிகளவில் நிறுவனங்கள் பங்கேற்கவும், வேலைநாடுநர்களுக்கான பதிவு மற்றும் நேர்முகத் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் பெற்றுத்தரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வை கிராமப்புறங்கள் வரை கொண்டு செல்லும் வகையில் விளம்பரப் பலகைகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முகாம் நடைபெறும் கல்லூரி வளாகம் மற்றும் கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரித்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை சார்பில் தொலைதூர கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இருந்து வேலைநாடுநர்கள் எளிதில் முகாமிற்கு வந்து செல்லும் வகையில், தேவையான அளவு பேருந்து வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் எவ்வித சிரமமும் இன்றி முகாமில் பங்கேற்கும் வகையில் சிறப்பு வாகனங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் தரைத்தளத்தில் நேர்முகத் தேர்வு அரங்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட தொழில் மையம் (DIC), தாட்கோ, முன்னோடி வங்கி (Lead Bank), RSETI உள்ளிட்ட துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைத்து, சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் திட்டங்கள், வங்கிக் கடன் உதவிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

முகாம் நடைபெறும் வளாகத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொள்ளவும், தீ விபத்து உள்ளிட்ட அவசரநிலைகளை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் வாகனங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவக் குழுவினர், முதலுதவி வசதிகள் மற்றும் 108 அவசர ஊர்தி ஆகியவை தயார் நிலையில் வைக்க வேண்டும். முகாம் நடைபெறும் நேரம் முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். முகாம் பணிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் 70 மாணவ தன்னார்வலர்களாக நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் பெருமளவில் பங்கேற்று, தங்களது கல்வித் தகுதி மற்றும் திறமைக்கேற்ற வேலைவாய்ப்புகளை பெற்றுப் பயனடைய தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.