நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 15ஆம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு மறுநாள் காலையில் புதுப்பெண்ணுக்கு கடுமையான வயிற்றுவலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, புதுமாப்பிள்ளையின் வீட்டு வாசலில் 7 மாத குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கர்ப்பமாக இருந்ததை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததாகக் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் புதுப்பெண் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

