தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த ராஜபாண்டியன் மனைவி தனலட்சுமி (37). இவர் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 02-10-2026 அன்று தனலட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தவெக விளாத்திகுளம் நகரச் செயலாளர் முத்துராமலிங்க சேதுபதி, "நகரச் செயலாளராக நான் இருக்கும்போது என்னை மதிக்காமல் நீ எப்படி மாவட்டச் செயலாளரைப் பார்க்கச் செல்லலாம்? விளாத்திகுளத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் என்னிடம் தான் கேட்க வேண்டும்" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், முத்துராமலிங்க சேதுபதி மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ஆகிய இருவரும் தனலட்சுமியின் வீட்டிற்கே நேரில் சென்றுள்ளனர். அங்கு தனலட்சுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், முத்துராமலிங்க சேதுபதி செருப்பைக் கழற்றி தனலட்சுமியின் முகத்தில் வீசியுள்ளார்.

அவரது மனைவி சௌந்தர்யா அங்கிருந்த துடைப்பத்தால் தனலட்சுமியை அடித்து, கீழே தள்ளித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த தனலட்சுமியின் கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களைத் தடுத்து மீட்டனர்.

பொது இடத்தில் தன்னை அவமானப்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்திய முத்துராமலிங்க சேதுபதி மீது தனலட்சுமி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் சனிக்கிழமை இரவு தவெக நகரச் செயலாளர் முத்துராமலிங்க சேதுபதி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள முத்துராமலிங்க சேதுபதியை தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் எட்டயபுரம் தவெக நகரச் செயலாளர் கனகராஜ் மற்றும் அவரது சகோதரர் அருவாளுடன் இளம்பெண்ணின் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அடங்குவதற்குள், விளாத்திகுளத்தில் தவெக நகரச் செயலாளரே சொந்தக் கட்சிப் பெண் நிர்வாகி வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.