தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாக இருந்து வந்தார். கடந்த மே 3-ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் கடந்த மே 31-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப் புகாரின் பேரில் ஜூன் 1-ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் கேரள எல்லை அருகே வைத்துப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
இச் சம்பவம் பெரும் அரசியல் பேசுபொருளான நிலையில், இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், அக் குற்றச்சாட்டுகளைத் தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை முற்றிலுமாக மறுத்ததுடன், கைது செய்யப்பட்ட இருவருக்கு மட்டுமே இச் சம்பவத்தில் தொடர்பு உள்ளது என உறுதிபடத் தெரிவித்தது.
இந்நிலையில், இக்கூட்டுப் பாலியல் வழக்குத் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புகார் அளித்த பெண்ணும், கைது செய்யப்பட்ட இரு நபர்களும் பரஸ்பரம் சமரசமாகச் செல்ல முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இம் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இரு தரப்பினரும் நேரில் ஆஜராகிச் சமரசமாகச் செல்வதை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை முற்றிலுமாக ரத்து செய்து உத்தரவிட்டது. இத்திடீர் திருப்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

