தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அரசு அமைந்தவுடன் 717 மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. ஆனால், அதன்பின்னர் படிப்படியாக மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. முன்னதாகத் தூத்துக்குடி மீளவிட்டான் ரோட்டில் மதுக்கடை அமைக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் சப்-கலெக்டர் தலையீட்டால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது குறிஞ்சிநகர் பகுதியில் புதிய தனியார்ப் பாருடன் கூடிய மதுக்கடை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குடியிருப்பு பகுதியில் மதுக்கடை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், 14-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகரத் திமுக துணைச் செயலாளருமான கீதா முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டு வந்து, திறக்கப்படவுள்ள மதுக்கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்குச் சொந்தமாக இந்தத் தனியார்ப் பாருடன் கூடிய மதுக்கடை அமையவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த செல்வி மற்றும் விக்னேஷ் ஆகியோர் தெரிவிக்கையில்: "இப்பகுதியில் கோவில், பள்ளிக்கூடம், மருத்துவமனை, ரேஷன் கடை ஆகியவை உள்ளன. பெண்கள் அதிகளவில் நடமாடும் இந்த இடத்தில் மதுக்கடை அமைந்தால் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும்.

ஏற்கனவே போராடி ஒரு கடையை அப்புறப்படுத்திய நிலையில், மீண்டும் இங்கு மதுக்கடை திறக்க அனுமதிக்கக் கூடாது. தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மீறித் திறக்க முயன்றால் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்படும்" என எச்சரித்தனர்.