தண்ணீரிலும் தரையிலும் அதிவேகமாகச் செல்லக்கூடிய இந்தியக் கடலோரக் காவல் படையின் அதிநவீன ஹோவர் கிராஃப்ட் ரோந்து கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தன.

இந்திய கடலோர காவல் படையில் ரோந்து கப்பல்கள், டோர்னியர் ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தண்ணீரிலும், தரையிலும் வேகமாகச் செல்லக்கூடிய 'ஹோவர் கிராஃப்ட்' ரோந்து கப்பல்களும் உள்ளன. இந்த அதிநவீன 'ஹோவர் கிராஃப்ட்' கப்பல் மூலம் கடலோர காவல் படையினர் கடற்கரையோரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளம் மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கடந்த 13-ந்தேதி 'எச்-561, எச்-562' ஆகிய இரண்டு 'ஹோவர் கிராஃப்ட்' ரோந்து கப்பல்கள் புறப்பட்டன. இந்தக் கப்பல்கள் நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையை வந்தடைந்தன. கரையில் கப்பல்கள் நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, துறைமுகக் கடற்கரைப் பகுதியிலிருந்த மக்கள், மீனவர்கள் திரண்டு வந்து அதிநவீன ரோந்து கப்பல்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். மேலும், இளைஞர்கள் பலர் ஆர்வம் மிகுதியில் கப்பல்கள் முன்பு நின்று கொண்டும் செல்ஃபி எடுத்தும், 'ரீல்ஸ்' எடுத்தும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்த இரண்டு கப்பல்களும் கேரளம் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடியில் இருந்து மீண்டும் புறப்பட்டு கடல் வழியாக மண்டபம் கடலோர காவல்படை தளத்திற்குச் சென்றன.