நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் நடைபெற்ற கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக இருந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநரைக் காவல்துறையினர் இன்று கைது செய்து சிறையிலடைத்தனர்.

திருச்செங்கோடு சக்கராம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் - அமுதா தம்பதியின் மகள்கள் நிவேதா (17 - பிளஸ் 1), தனுஸ்ரீ (13 - 7-ஆம் வகுப்பு), அபிநயா (12 - 6-ஆம் வகுப்பு) ஆகியோர் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்களை, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் இவர்களது சித்தப்பா ரமேஷ் பாபுவின் மகள் கலைச்செல்வி (எ) சுபிதா (19), தினமும் கல்லூரி முடிந்து வந்து தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வழக்கம்போல் நேற்று மாலையும் கலைச்செல்வி 3 மாணவிகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில், சக்கராம்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே பிரிவு சாலையைக் கடக்க முயன்றபோது, ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் கல்லூரிப் பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் கலைச்செல்வி மற்றும் அபிநயா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிவேதா மற்றும் தனுஸ்ரீ ஆகியோர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே இருவரது உயிரும் பிரிந்தது.

இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய பேருந்து ஓட்டுநரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், விபத்துக்குக் காரணமான கல்லூரிப் பேருந்து ஓட்டுநர் பிரவீன் (23) என்பவரைப் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

அவர் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த எலச்சிபாளையம் காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.