தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துக்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் அர்ஜுன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் அர்ஜுன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "என் இளைய மகளின் திருமணத்தின்போது, என் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கை குறித்துப் பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தன. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல், அவரது தனியுரிமையை மதித்து அது குறித்துக் கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து வந்தேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால், சரியான நேரத்தில் தன் தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவிப்பார்.
ஆனால், ஒரு தந்தையாக என் மகளையும், அவரது குணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.
எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துக்களைத் தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும். எனவே, என் மூத்த மகள் குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

