தமிழகத்தில் முதற்கட்டமாக 2,500 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநிலப் பொது மறுஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவம், மருத்துவக் கல்வி - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ் மற்றும் குறு, சிறு - நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் மருத்துவப் பணிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்துத் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனைகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 47 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் கோ.க. அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணி நியமனங்கள்: தமிழகத்தில் முதற்கட்டமாக 2,500 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பொறுப்பேற்ற பிறகு 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 1,193 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,724 செவிலியர் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன.

மழைக்காலத்தை முன்னிட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழை நின்ற பிறகு டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் துறை ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

இந்நிகழ்வில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் செயலாளர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சரவணன், மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்குநர் வ. லோகநாயகி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எபனேசர் ஜோயல் குமார், மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் பிரியதர்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் யாழினி, வித்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.