ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற 51-வது சப்-ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக அணியில் இடம்பெற்ற தூத்துக்குடி மாவட்ட மாணவிகள், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 4 வரை 51-வது சப்-ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக பெண்கள் அணி சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகள் லியோ ஜஃப்லின், தான்யா, முருகேஸ்வரி மற்றும் செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி அன்ஷிகா ஆகிய 4 மாணவிகள் முக்கிய வீராங்கனைகளாகச் செயல்பட்டு வெற்றிக்கு வித்திட்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க வகையில், தூத்துக்குடி வீராங்கனைகள் தான்யா மிகவும் மதிப்புமிக்க வீராங்கனை (Most Valuable Player - MVP) விருதையும், அன்ஷிகா சிறந்த விளையாட்டு வீரர் (Best Player Award) விருதையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

சாதனை படைத்த 4 மாணவிகள் மற்றும் தமிழ்நாடு அணியின் தலைமைப் பயிற்சியாளர் வினோத் கேசவலு ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷு மகாஜனை நேரில் சந்தித்துத் தங்கள் பதக்கங்களைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

