தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள பொத்தரங்கன்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் லிங்கேஸ்வரன் (26). ராஜகோபாலின் மனைவி ரமா, உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாயார் இறந்த செய்தியைக் கேட்ட லிங்கேஸ்வரன் கதறி அழுது மனமுடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த அவர், தாயின் நினைவாக அவரது சேலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் உடலுடன் வீட்டிற்கு வந்த ராஜகோபால், மகன் லிங்கேஸ்வரன் தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறித் துடித்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் காவல் நிலையப் போலீசார், லிங்கேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் தாயும் மகனும் உயிரிழந்த சம்பவம் பொத்தரங்கன்விளை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.