தூத்துக்குடி மீளவிட்டான் காமராஜ் நகரில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 50 பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் இன்று 3-வது நாளாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மீளவிட்டான் காமராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றைத் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இச்செய்தி பரவியதைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதியில் மதுபானக் கடை அமைந்தால் சட்டம்-ஒழுங்குப் சீர்கேடு ஏற்படும் என்றும், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் சென்று வரும் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறி அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்பகுதியில் புதிய கட திறக்கக் கூடாது என வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சந்தனராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 3-வது நாளாக நடைபெறும் இப்போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 60 பேர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். பொதுமக்கள் போராட்டம் எதிரொலியகா அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

