நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் போலி செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1.03 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஃபாஸ்டேக் (FASTag) ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களிடம் இருந்து முறைகேடாகக் கட்டணம் வசூலிக்க, அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பயன்படுத்தியதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 100 சுங்கச்சாவடிகளில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க 'மப்டேட்டா' (Mapdata) மற்றும் 'எனி' (Any) ஆகிய 2 அங்கீகரிக்கப்படாத செயலிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் செயலிகள் மூலம் பெறப்படும் தொகையைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கணக்கிற்குள் கொண்டுவராமல், போலி ரசீதுகள் தயாரித்து மாற்று வழிகளில் முறைகேடு செய்துள்ளதாகக் காவல்துறை புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 14 இடங்களில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடியே 3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டக் காவல்துறையினர் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை இந்த விசாரணையைத் தொடங்கியது. மிர்சாபூரில் உள்ள அத்திரைலா சிவ குலாம் சுங்கச்சாவடி மற்றும் நாடு முழுவதும் உள்ள பல சுங்கச்சாவடிகளில் நடைபெற்ற இந்த முறைகேடுகள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

