தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட ஸ்ரீமூலக்கரையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ""எங்களது ஸ்ரீமூலக்கரை கிராம எல்லைக்குள் கடந்த 6 ஆண்டுகளாக தனியார் சூரிய மின் உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. இது தொடங்கப்பட்ட காலம் முதல் இதுவரை எங்களது ஊர் பொதுமக்களுக்கோ, கால்நடைகளுக்கோ அல்லது விவசாய மேய்ச்சல் நிலங்களுக்கோ எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிறுவனம் எங்களது கிராமத்தின் திருவிழாக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்குக் கடந்த 6 ஆண்டுகளாக நன்கொடைகளை வழங்கி வருகிறது. மேலும், எங்களது கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தினசரி வேலைவாய்ப்பை வழங்கி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறது.

சூரிய மின் நிலையத்தால் எவ்வித இடையூறும் இல்லாத சூழலில், வெளிநபர்கள் சிலர் 'சமூக ஆர்வலர்கள்' என்ற பெயரில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சோலார் நிறுவனத்திற்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் இத்தகைய வெளிநபர்களுக்கும் எங்களது கிராமத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் தலையிட்டு, எங்களது கிராமத்திற்கும், வழக்கம்போல் இயங்கி வரும் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.