செஷல்ஸ் நாட்டு கடல் பகுதியில் படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள், செஷல்ஸ் நாட்டு மீட்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 'சாஜிரா' என்ற மீன்பிடிப் படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். செஷல்ஸ் நாட்டு கடல் எல்லைப் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாகப் படகின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் அவர்கள் நடுக்கடலில் உதவி எதுவும் கிடைக்காமல் தத்தளித்தனர்.

நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களைப் பத்திரமாக மீட்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பாட்டில் இறங்கிய விஜய் வசந்த் எம்.பி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைத் தொடர்புகொண்டு, செஷல்ஸ் நாட்டு அரசுடன் பேசி மீனவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, செஷல்ஸ் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் அப்பகுதி அரசைத் தொடர்புகொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரியது. அதன்பேரில், செஷல்ஸ் நாட்டின் கடலோரக் காவல் படையின் 'பி.எஸ் சொரோஸ்டர்' என்ற கப்பல் மீட்புப் பணியில் ஈடுபட்டு, பழுதடைந்த இந்திய மீன்பிடிப் படகைக் கண்டறிந்தது.

படகில் இருந்த 17 இந்திய மீனவர்களுக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கிய கடலோரக் காவல் படையினர், பழுதடைந்த மீன்பிடிப் படகைக் கரைக்கு இழுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செஷல்ஸ் கரைக்குக் கொண்டுவரப்பட்டதும், மீனவர்கள் அனைவரும் விரைவில் தாய்நாடு திரும்பத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மத்திய வெளியுறவுத் துறை சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.