நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில், "சட்டமன்றத்திலும் ஆரோக்கியமான கட்டா குஸ்திதான் நடக்கிறது" என அமைச்சர் ராஜ்மோகன் கலகலப்பாகப் பேசினார்.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி இப்படத்தின் 50-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: "இன்றைய காலகட்டத்தில் ஒரு நாளில் 5 காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலாக உள்ள நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து ஓடுவது மிகப்பெரிய சாதனையாகும்.

விஷ்ணு விஷாலின் கடின உழைப்பும், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சிறுமி ஜாராவின் சிறந்த நடிப்பும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சினிமா மற்றும் கல்வித் துறையில் தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி வருகிறார்.

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது; ஆனால் அது மக்களுக்கு யார் நல்லது செய்வது என்பதற்கான ஆரோக்கியமான போட்டிதான். அவைக் கூட்டம் முடிந்ததும் கைகுலுக்கிக் கொண்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விடுவோம்.

இப்போது சினிமாவுக்கு ஒரு புதிய போட்டி வந்துள்ளது. 'எப்படா மாண்புமிகு பேரவை தலைவரே' என முதலமைச்சர் விஜய் கூறுவார் என்று மக்கள் அனைவரும் டிவியைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என அனைவராலும் கொண்டாடப்படும் பிரபுதேவா மாஸ்டர் இங்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் திரைத்துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் உடனுக்குடன் செயல்படுத்தப்படும்." இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.