பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.
சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படுமா? என அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அரசு மரியாதை வழங்குவது குறித்து ஆலோசித்து விரைவில் முடிவு வெளியிடப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் இரங்கல்
முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது: “தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

