புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 98.47% திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள ₹5,451 கோடியை ஆர்பிஐ மூலம் மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கு சிபிஎம் தலைவர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.47% நோட்டுகள் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துள்ளன. இருப்பினும், மீதமுள்ள ₹5,451 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வராமல் உள்ளன.
இந்நிலையில், பொதுமக்களிடம் இன்னமும் ₹2,000 நோட்டுகள் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை என்றும், அந்த நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ள ஆர்பிஐ, அவற்றை மாற்றுவதற்கு அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்கு இரு வழிகளை வழங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சிபிஎம் தலைவர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: "கடந்த 2016-ஆம் ஆண்டு ஒருநாள் இரவு, கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துப் பொதுமக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் பிரதமர் மோடி. அதன் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டனர். இதனால் கருப்பு பணம் மேலும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.
அதனைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-க்குள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்தனர். ஆனால், தற்போது ₹5,451 கோடி ரூபாய் திரும்ப வரவில்லை என்பதால், மீண்டும் அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.
மோடியின் நண்பர்களான முதலாளிகளும் அரசியல்வாதிகளும் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை அதிகாரப்பூர்வமாக வெள்ளையாக மாற்றிக் கொள்ளவே இந்தச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதா என்ற பலத்த கேள்வி எழுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

