ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இப் வழக்கை விசாரித்தது. அப்போது, "இது சட்டரீதியான பிரச்சினையை விடத் தொழில்நுட்பரீதியான பிரச்சினை" எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், புதிய கட்டண நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இவ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) ஆகியவை அடுத்த 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கடராமன் வாதிடுகையில், "இந்தியாவில் நடைபெறும் 96 சதவீத யுபிஐ பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு உட்பட்டவையே. எனவே, இந்த புதிய கட்டண வரம்பு பெரும்பான்மையான மக்களுக்குப் பொருந்தாது. இக் கட்டணம் அரசுக்குச் செல்லும் வருவாய் அல்ல; டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் சேவை நிறுவனங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படும் தொகையாகும்" என விளக்கமளித்தார்.
கடந்த 6 ஆண்டுகளாக முழுமையாக இலவசமாக இருந்து வந்த யுபிஐ சேவையில், வரும் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறையின் விவரங்கள்:
இக் கட்டணம் தனிநபர்களுக்கு இடையேயான (P2P) பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தாது.
ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு (Merchant Transactions) மட்டுமே வியாபாரிகளிடம் இருந்து 0.4% கட்டணம் வசூலிக்கப்படும்.
பரிவர்த்தனைத் தொகை ரூ.75,000 அல்லது அதற்கு மேல் இருந்தாலும், அதிகபட்சக் கட்டணம் ரூ.300-க்குள் மட்டுமே இருக்கும்படி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் போன்ற துறைகளில் நடைபெறும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மாற்றமில்லாமல் ஒரே கட்டணமாக ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படும்.
மாதம் ரூ.1 லட்சம் வரை யுபிஐ கியூஆர் (QR) கோடு மூலம் பணம் பெறும் சிறு வணிகர்களுக்கு இக் கட்டண முறையிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

