மும்பையில் ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற நிதிக்க கொள்கைக் குழுவின் கூட்டத்தில், 6 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு ஆதரவாக 4 பேரும், எதிர்ப்பாக 2 பேரும் வாக்களித்தனர். இதன் அடிப்படையில் பெரும்பான்மை முடிவாக வட்டி விகித உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2023-க்குப் பிறகு முதல்முறையாக தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வணிக வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து, மாதாந்திரத் தவணை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா: "சர்வதேச அரசியல் நிகழ்வுகளால் உலகளாவிய பொருளாதாரச் சூழல் சவாலாக உள்ளது. இருப்பினும் இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும் மீள்திறனுடனும் திகழ்கிறது. பணவீக்கத்தைப் பொறுத்தவரை, அடுத்த மூன்று காலாண்டுகளில் நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கம் (CPI) சராசரியாக 5.8 சதவீதமாக இருக்கும் என்றும், இந்த நிதியாண்டில் மொத்த பணவீக்கம் 4.4 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஜி.டி.பி. வளர்ச்சி கணிப்பு உயர்வு:
அமெரிக்கா - ஈரான் மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் வளர்ச்சி கணிப்பை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.
2026-27 நிதியாண்டு ஜி.டி.பி. வளர்ச்சி: 6.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக உயர்வு.
இரண்டாம் காலாண்டு வளர்ச்சி: 6.4 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக உயர்வு.
மூன்றாம் காலாண்டு வளர்ச்சி: 6.5 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

